ADDED : ஏப் 04, 2024 10:21 PM

புதுடில்லி : பிரபல நடிகையும், லோக்சபா எம்.பி.,யுமான நவ்நீத் கவுர் ராணாவின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மஹாராஷ்டிராவின் அமராவதி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் நவ்நீத் கவுர் ராணா. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.
இவர், தமிழில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட பல படங்களில் நடித்து
உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், இவர் பா.ஜ.,வில் இணைந்தார்.
வரும் லோக்சபா தேர்தலிலும், பா.ஜ., சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் போலி ஆவணங்களை காட்டி, மோச்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வாங்கியதாகவும், உண்மையில் இவர் உயர் ஜாதியைச் சேர்ந்தவர் என்றும், சிவசேனாவைச் சேர்ந்த ஆனந்த் ராவ் என்பவர், மும்பை மாவட்ட ஜாதி சான்றிதழ் ஆய்வு கமிட்டியில் புகார் செய்தார். விசாரணையில் நவ்நீத் ராணாவுக்கு ஆதரவாக ஆய்வு கமிட்டி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆனந்த் ராவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராணாவுக்கு எதிராக ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அவருக்கு2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜாதி சான்றிதழ் ஆய்வு கமிட்டி வழங்கிய இறுதி தீர்ப்பில் குறுக்கிட்டு, உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான , நவ்நீத் ராணா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

