தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரஷ்ய பயணம் திடீர் ரத்து
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரஷ்ய பயணம் திடீர் ரத்து
ADDED : மே 27, 2025 07:15 AM

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரஷ்ய பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பாக உயர் பிரதிநிதிகளின் 13வது சர்வதேச கூட்டம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு குறித்தும், பிராந்திய பாதுகாப்பு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, அஜித் தோவலின் ரஷ்ய பயணம் உலக நாடுகளிடையே அதிக கவனம் பெற்றிருந்தது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மாஸ்கோ பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பருவ காய்ச்சல் காரணமாக அவரது இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக வேறு யார் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

