நாகசந்திரா - மாதவாரா மெட்ரோ ரயில்; அக்., 3, 4ல் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
நாகசந்திரா - மாதவாரா மெட்ரோ ரயில்; அக்., 3, 4ல் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
ADDED : செப் 30, 2024 12:11 AM
பெங்களூரு : நாகசந்திரா - மாதவாரா இடையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள, மெட்ரோ ரயில் பாதையில் வரும் 3, 4ம் தேதிகளில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆனந்த் மதுகர் சவுத்ரி ஆய்வு நடத்துகிறார்.
பெங்களூரு நாகசந்திராவில் இருந்து சில்க் இன்ஸ்டிடியூட் வரை, மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெலமங்களாவை இணைக்கும் வகையில், நாகசந்திராவில் இருந்து மாதவாரா வரை 3.70 கி.மீ., துாரத்திற்கு புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் பாதையில் மஞ்சுநாத்நகர், சிக்கபிதரகல்லு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பின், சிக்னல், தொலை தொடர்பு, மின்வினியோக அமைப்பு ஒருங்கிணைப்பு, திறன் சோதனை உள்ளிட்ட சில முக்கிய சோதனைகளை, மெட்ரோ ரயில் நிர்வாக இன்ஜினியர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் புதிய பாதையில் ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்று, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆனந்த் மதுகர் சவுத்ரிக்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் கடிதம் எழுதி இருந்தது.
இதையடுத்து வரும் 3, 4ம் தேதிகளில் ஆனந்த் மதுகர் சவுத்ரி, அவரது தலைமையில் வரும் குழுவினர் புதிய பாதையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
நாகசந்திரா முதல் மாதவாரா வரை அமைக்கப்பட்டு உள்ள, புதிய மெட்ரோ ரயில் பாதையில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆய்வுக்கு பின், திருப்திகரமாக இருந்தால், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ரயில் சேவை துவங்க வாய்ப்பு உள்ளது.
நாங்கள் ஏற்கனவே அனைத்து சோதனைகள் செய்து விட்டோம். இனி மாற்றம் எதுவும் இருக்காது.
இந்த பணியை 2019ல் முடிக்க திட்டமிட்டோம். ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல், கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகள் தாமதமாயின. ரயில் சேவை துவங்கினால் நெலமங்களா, மாதநாயக்கனஹள்ளி பகுதியில் வசிப்போர், பெங்களூரு நகருக்குள் சிரமமின்றி வர முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

