முதல்வருக்கு கவுரவ பிரச்னையான மைசூரு, சாம்ராஜ் நகர் தொகுதிகள்
முதல்வருக்கு கவுரவ பிரச்னையான மைசூரு, சாம்ராஜ் நகர் தொகுதிகள்
ADDED : பிப் 28, 2024 06:10 AM

லோக்சபா தேர்தல் காங்கிரசின் மற்ற தலைவர்களை விட, முதல்வர் சித்தராமையாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியே அவரது சக்தியை முடிவு செய்யும். முதல்வர் பதவியை தக்க வைக்கவும் உதவும்.
மார்ச் முதல் வாரம், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் பா.ஜ., - ம.ஜ.த., உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகின்றன. அந்தந்த கட்சிகளில் சீட் எதிர்பார்க்கும் தலைவர்கள், சீட் உறுதியானவர்கள் மும்முரமாக பிரசாரம் செய்கின்றனர். வாக்காளர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கின்றனர்.
முக்கியத்துவம்
லோக்சபா தேர்தல், காங்கிரசின் மற்ற தலைவர்களை விட முதல்வர் சித்தராமையாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம், தனக்கு இரண்டாவது முறையாக, முதல்வராக வாய்ப்பளித்த காங்கிரஸ் மேலிடத்துக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.
தன் சக்தியை நிரூபித்தால்தான், முதல்வராக நீடிப்பதில் ஐந்து ஆண்டுகளுக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. இல்லையென்றால் லோக்சபா தேர்தல் முடிந்த பின், மாநிலத்தில் முதல்வரை மாற்றுங்கள் என்ற கோஷம் எழுந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
இதை மனதில் கொண்டு, முதல்வர் சித்தராமையா ஒவ்வொரு தொகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். செல்வாக்குமிக்க தலைவர்களை களமிறக்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக தன் சொந்த மாவட்டம் மைசூரு, சாம்ராஜ்நகர் தொகுதிகளை கைப்பற்றுவதை, கவுரவ பிரச்னையாக கருதுகிறார்.
காங்., கொடி
தற்போது இவ்விரண்டு தொகுதிகளும், பா.ஜ., வசம் உள்ளன. இங்கு காங்கிரஸ் கொடியை பறக்கவிடுவதன் மூலம், கட்சியில் உள்ள எதிரிகளுக்கு, தன் சக்தியை காண்பிக்க வேண்டும் என்பது, சித்தராமையாவின் எண்ணம்.
பா.ஜ.,வை எதிர்க்கொள்ள யாரை களமிறக்கலாம் என்ற கேள்வி துளைத்தெடுக்கிறது. மைசூரு, சாம்ராஜ்நகர் தொகுதிகளின் சீட்டுக்கு, பலத்த போட்டி உள்ளது என்றாலும், சீட் எதிர்பார்க்கும் தலைவர்கள் அனைவருமே புதிய முகங்கள். தொகுதி மக்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்கள். இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு.
இதற்கு முன்பு, சாம்ராஜ்நகர் தொகுதி காங்கிரஸ் வசமிருந்தது. துருவ நாராயண் எம்.பி.,யாக இருந்தார். மாவட்டத்தில் இவருக்கு தனி செல்வாக்கு உள்ளது. சிறப்பாக பணியாற்றியதுடன், மக்களிடம் எளிமையாக பழகினார். இத்தகைய தலைவரே, 2019 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தார். 2023 சட்டசபை தேர்தல் நேரத்தில், அவர் காலமான பின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், தலைவர்கள் இல்லை.
யதீந்திரா
மைசூரு லோக்சபா தொகுதியில், முதல்வரின் மகன் யதீந்திராவை களமிறக்கும்படி ஆதரவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் முதல்வருக்கு உடன்பாடில்லை. மைசூரில் பா.ஜ.,வும் வலுவாக உள்ளது. இம்முறையும் பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவரை எதிர்கொண்டு வெற்றி பெறுவது கஷ்டமானது. ஒருவேளை தோற்றால் மகனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என, முதல்வர் அஞ்சுகிறார்.
சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவை போட்டியிடும்படி, முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் அமைச்சர் போட்டியிட மறுக்கிறார். தன் மகன் சுனில் போசுக்கு சீட் கேட்கிறார். எனவே இரண்டு தொகுதிகளில், யாரை களமிறக்குவது என, தெரியாமல் முதல்வர் கையை பிசைகிறார்.
காங்கிரஸ் அரசில், முதல்வராக இருந்தும், சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றால், தன் செல்வாக்கு குறையும் என்ற கவலையும், முதல்வரை வாட்டி வதைக்கிறது.
- நமது நிருபர் -

