பார்லி.,க்குள் 'எலக்ட்ரானிக்' உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை
பார்லி.,க்குள் 'எலக்ட்ரானிக்' உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை
ADDED : டிச 27, 2025 08:20 AM

- நமது டில்லி நிருபர் -
'ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமரா'க்கள் மற்றும் அதிநவீன, 'எலக்ட்ரானிக்' உபகரணங்களை பார்லிமென்ட் உள்ளே எடுத்து வர, எம்.பி.,க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய், லோக்சபாவுக்குள், 'இ - சிகரெட்' எனப்படும் மின்னணு சிகரெட் பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போல பல்வேறு காலகட்டங்களில் எம்.பி.,க்கள் பார்லி., நடவடிக்கைகளை படம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், லோக்சபா செயலகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து எம்.பி.,க்களுக்கும் லோக்சபா செயலகம் அனுப்பி உள்ளது.
அதன் விபரம்: தற்போதைய காலகட்டத்தில், அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்கள் மிக எளிதாக சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பாக, 'ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கூலிங் கிளாஸ், பென் கேமரா'க்கள் உள்ளிட்டவை நிறைய வந்துவிட்டன.
இந்த உபகரணங்கள் காட்சிகளை, ஒலிகளை பதிவு செய்யும் வசதிகளுடன் உள்ளன. இவற்றை தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது, சில சமயங்களில் எம்.பி.,க்களின் தனியுரிமையை பாதிக்கின்றன. மேலும், இதுபோன்ற பொருட்கள் பார்லிமென்ட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலும் இருக்கின்றன.
இதுபோன்ற பொருட்களை எல்லாம், எம்.பி.,க்கள் அனைவரும் பார்லிமென்ட் எஸ்டேட் வளாகத்திற்குள் வரும் எந்த பகுதியிலும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

