ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
ADDED : டிச 28, 2025 06:11 PM

நமது நிருபர்
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குளிர்கால நடவடிக்கைகளை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் குளிர்காலத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, பாதுகாப்பு படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஜம்மு பகுதியில் 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உறைபனியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் உள் நுழைவதை தடுக்க, மலைப்பகுதிகள், காடுகள் மற்றும் தொலைதூர பள்ளத்தாக்குகளில் ராணுவ ரோந்துப் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் போலீசார், சிஆர்பிஎப், சிறப்பு நடவடிக்கைக் குழு, வனக் காவலர்கள் மற்றும் கிராமப் பாதுகாப்புக் காவலர்கள் ஆகியோருடன் நெருக்கமான ஒருங்கிணைப்பின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ட்ரோன்கள், வெப்ப இமேஜர்கள் (thermal imagers) மூலம் சிறப்பு பயிற்சி பெற்ற குளிர்கால போர் பிரிவுகள் ஈடுபட்டுள்ளன.இந்த குளிர்காலத்தில் மீதமுள்ள பயங்கரவாத முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

