ADDED : டிச 22, 2025 03:32 PM

புதுடில்லி: விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இம்மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ''இது வளர்ச்சியல்ல, அழிவு'' என்று, காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
2008ல் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்ட மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 125 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிரும் வகையில் இந்த மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வளர்ந்த பாரதம் என்ற பொருள்படும், 'விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என பெயர் மாற்றப்பட்டது.
'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்ற சட்டத்தின் பெயர் 'வி.பி., ஜி ராம் ஜி' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 'வி.பி., ஜி ராம் ஜி' மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.
இம்மசோதா தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொது மக்களிடம் எந்த விவாதமும் நடக்கவில்லை. பார்லிமென்டிலும் விவாதிக்கப்படவில்லை. மாநிலங்கள் அனுமதி பெறப்படவில்லை. ஜனநாயகம் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய இரண்டின் மீது மோடி அரசு புல்டோசரை ஏற்றியுள்ளது. இது வளர்ச்சியல்ல. அழிவு. இதற்கான விலையை கோடிக்கணக்கான உழைக்கும் இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதன் மூலம் செலுத்தப் போகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

