பள்ளி விடுதியில் குறும்புத்தனம்: 8 மாணவர்களின் கண் பார்வை பாதிப்பு
பள்ளி விடுதியில் குறும்புத்தனம்: 8 மாணவர்களின் கண் பார்வை பாதிப்பு
ADDED : செப் 14, 2025 11:59 PM

புவனேஸ்வர்: ஒடிஷாவில் பள்ளி விடுதியில் சக மாணவர்கள் செய்த குறும்புத்தனத்தால், எட்டு பேரின் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷாவில் கந்தமால் மாவட்டத்தின் சாலாகூடாவில் சேவாஸ்ரமம் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது.
இந்நிலையில் அங்கு தங்கியிருந்த மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் எட்டு பேருக்கு நேற்று காலை எழுந்தபோது கண்கள் திறக்க முடியாமல் எரிச்சல் மற்றும் வலியால் துடித்தனர்.
இதையறிந்த விடுதி காப்பாளர், பாதிப்புக்குள்ளான மாணவர்களின் கண்களை ஆய்வு செய்ததில், பசை ஒட்டப்பட்டு இருந்ததை கண்டறிந்தார். அப்போது விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களின் குறும்புத்தனத்தால் இச்செயல் அரங்கேறி இருப்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு, அனைவரும் உறங்கியபின், எட்டு பேரின் கண்களில் சக மாணவர்கள் பசையை பூசியுள்ளனர். இதன் காரணமாக, அவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் விடுதி நிர்வாகிகள் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் மேல்சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதால், மாணவர்களின் கண் பார்வை முழுதும் பறிபோகாமல் காப்பாற்றப்பட்டது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
பாதிப்புக்குள்ளான எட்டு மாணவர்களில், ஒருவர் மட்டும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மற்றவர்கள் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிக்கல்வித் துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், அலட்சியமாக செயல்பட்ட அப்பள்ளியின் முதல்வர் மனோரஞ்சன் சாஹு என்பவரை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.