மாண்டியா தொகுதியில் மஞ்சுநாத் 'மாஜி' அமைச்சர் புட்டராஜு விருப்பம்
மாண்டியா தொகுதியில் மஞ்சுநாத் 'மாஜி' அமைச்சர் புட்டராஜு விருப்பம்
ADDED : பிப் 20, 2024 06:50 AM

மாண்டியா: ''மாண்டியா லோக்சபா தொகுதியில் டாக்டர் மஞ்சுநாத் போட்டியிடட்டும்,'' என ம.ஜ.த.,வின் முன்னாள் அமைச்சர் புட்டராஜு அழைப்பு விடுத்தார்.
பெங்களூரின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனராக பணியாற்றிய டாக்டர் மஞ்சுநாத், ஜனவரி 31ல் ஓய்வு பெற்றார்.
இவரை அரசியலுக்கு அழைத்து வர, முயற்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் பெங்களூரு வடக்கு அல்லது பெங்களூரு ரூரல் தொகுதியில் களமிறக்க, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன.
இதற்கிடையில் இவரை மாண்டியாவில் களமிறக்கும்படி, ம.ஜ.த.,வின் முன்னாள் அமைச்சர் புட்டராஜு, அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று மாண்டியாவில் அவர் கூறியதாவது:
மஞ்சுநாத் மாண்டியா தொகுதியில் வேட்பாளராக, ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள் ஆசி கூற வேண்டும். மருத்துவ துறையில் பல சாதனைகள் செய்துள்ள டாக்டர் மஞ்சுநாத், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு மாண்டியா மாவட்டத்தில், தொழில் நிறுவனம், தோட்டம், ரைஸ் மில் உள்ளன.
மஞ்சுநாத் படித்ததும் மாண்டியாவில் தான். இவரது உறவினர்கள் பலர் இங்குள்ளனர். எனவே அவர் இங்கிருந்தே போட்டியிடட்டும்.
மருத்துவ துறையில் சிறந்த சாதனை செய்த அவர், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிரபலமடைந்தவர். அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரானால், அவரது சேவை நாட்டுக்கு கிடைக்கும்.
ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், டாக்டர் மஞ்சுநாத்தை ஆசிர்வதித்து, மாண்டியா தொகுதியில் போட்டியிடும்படி செய்து, மாநிலத்துக்கும், நாட்டுக்கும் இவரது சேவை கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

