சிறுவனை கட்டாய மதமாற்றம் செய்த மதரசா பள்ளி முதல்வர் கைது
சிறுவனை கட்டாய மதமாற்றம் செய்த மதரசா பள்ளி முதல்வர் கைது
ADDED : செப் 10, 2025 12:57 AM

குஷிநகர்: உத்தர பிரதேசத்தில், 15 வயது சிறுவனை கட்டாயமாக மதம் மாற்றி, பெயரையும் மாற்றிய மத ரசா பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குஷிநகர் மாவட்டத்தில் உள்ள மன்சச்சாபர் என்ற பகுதியைச் சேர்ந்த ரப்ரி தேவி என்பவர், போலீசில் அளித்த புகார்:
இலவச உணவு, உடை, தங்குமிடம், கல்வி தருவதாகக் கூறி, என் 15 வயது மகன் விபின் குஷ்வாஹாவை, மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மதரசா பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹ்மான் அழைத்துச் சென்றார்.
ஆனால், என் மகனை மூளைச்சலவை செய்து, முஸ்லிம் மதத்துக்கு அவர் மாற்றி உள்ளார்.
மேலும், அவனது பெயரையும் நுார் ஆலம் என, மாற்றி உள்ளார். என் மகனை ஒப்படைக்கும்படி கேட்டால், தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, அவர் கொலை மிரட்டலும் விடுக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதன்படி, உ.பி., சட்ட விரோத மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், மதரசா பள்ளி முதல்வர் முஜிபுர் ரஹ்மானை கைது செய்தனர். பாலியல் வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ரப்ரி தேவியின் கணவர் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
கோஹர்கட்டி கிராமத்தில் உள்ள மதரசா பள்ளி முன், அவர் சமீபத்தில் தகராறில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்தே, அவரது மகன் விபின் குஷ்வாஹா கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இஸ்லாமிய கல்வி முறை பற்றி கற்றுத்தரும் பள்ளிகள், மதரசா எனப்படுகின்றன.