மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : மே 17, 2024 05:49 PM

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த வழக்கில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆம் ஆத்மி மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. நீதித்துறை வரலாற்றில், மோசடி வழக்கில் அரசியல் கட்சி மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையாகும்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அக்கட்சி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டில்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் கைது செய்தது. இநத வழக்கில் ஜூன் 1 வரை அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஏழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் டில்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டாவதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி மற்றும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இது முதல்முறையாகும்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

