உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவோம்: பிரதமர் அழைப்பு
உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்துவோம்: பிரதமர் அழைப்பு
UPDATED : செப் 22, 2025 09:39 PM
ADDED : செப் 22, 2025 06:25 PM

புதுடில்லி: '' இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது.
சேமிப்பு திருவிழா
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: நவராத்திரி பண்டிகை துவங்கும் நேரத்தில், அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அனைவருக்கும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் தரட்டும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியை கொண்டாட மற்றொரு காரணமும் சேர்ந்துள்ளது. இன்று (செப்.,22) முதல், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை உணர துவங்கி உள்ளோம். இது, நாடு முழுவதும் ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழாவை குறிக்கிறது.
மகிழ்ச்சி
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் முக்கிய அம்சம், 5 மற்றும் 18 சதவீதம் என்ற வரி அடுக்கு மட்டுமே இருக்கும். உணவு, மருந்து, சோப், பற்பசை, காப்பீடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். இன்னும் சில பொருட்களுக்கு வரி இருக்காது. இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் ரூ.2 லட்சம் கோடி சேமிக்க முடியும். வர்த்தகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் சீர்திருத்தத்துக்கு வரி சீர்திருத்தத்துக்கு முன்னர் மற்றும் பின்னர் என்ற பலகை வைத்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
விடுதலை
வீட்டு உபயோக பொருட்களின் விலை குறையும் போது, உங்களின் லட்சியங்களை நிறைவேற்ற முடிவதுடன், வீடு, வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க முடியும். விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்ல முடியும். 2017 ல் நமது நாட்டின் ஜிஎஸ்டி பயணம் துவங்கிய போது, நமது குடிமக்கள் மற்றும் வர்த்தகர்கள், பல அடுக்கு வரிப்பின்னலில் இருந்து விடுதலை பெற்றனர். ஒட்டு மொத்த நாட்டையும் ஒரே தேசம் ஒரே வரி என்ற முறையில் ஜிஎஸ்டி இணைத்ததுடன், எளிமையாக்கியது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பங்கேற்புடன் ஜிஎஸ்டி கவுன்சில் மக்கள் ஆதரவான முடிவை எடுத்தது.
இந்த சீர்திருத்தத்தை மேலும் கொண்டு வந்து அமைப்பை எளிமைப்படுத்தி, வரிகளை குறைத்து மக்களின் கைகளில் பணத்தை சேமிக்க வைத்துள்ளோம். சிறிய தொழிற்சாலை வைத்துள்ளவர்கள், கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறுகுறு தொழல்முனைவார் எளிதாக தொழில் செய்வதையும், சிக்கல்கள் தீர்க்கப்படுவதையும் பார்ப்பார்கள். சிறுகுறு தொழில்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இன்றியமையாதது
2047 ல் வளர்ந்த பாரதம் என்பது நமது இலக்கு. இதனை எட்டுவதற்காக, நாம் சுயசார்பு என்ற பாதையில் பயணிப்பது இன்றியமையாதது. இந்த சீர்திருத்தம் உற்பத்தி துறையை வலுப்படுத்துவதுடன், தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி எடுத்துச் செல்லும். இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.
நமது தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தயாரித்த பொருட்களை ஒவ்வொரு முறை வாங்கும் போதும், நீங்கள் பல குடும்பங்கள் வருமானம் ஈட்ட உதவுவதுடன், நமது இளைஞர்களுக்காக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் செய்யும். நமது கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வோம் என உறுதி ஏற்க வேண்டும்.
சுதேசி பொருட்களை மட்டும் வாங்குவோம். சுதேசி பொருட்களை மட்டும் விற்போம் என பெருமையுடன் சொல்வோம்.
' டீம் இந்தியா' என்ற அடிப்படையில், தொழில்துறை , உற்பத்தி துறை மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.