சட்டம் - ஒழுங்கு பிரச்னை: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் தாக்கு
சட்டம் - ஒழுங்கு பிரச்னை: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் தாக்கு
ADDED : நவ 28, 2024 08:41 PM
விக்ரம் நகர்:டில்லியில் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் மத்திய அரசு மீது ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
டில்லியில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.
நகரில் எங்கும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை நிறைந்த சூழல் உள்ளது. இரவு 7:00 மணிக்கு மேல் பெண்கள் வெளியே செல்ல பயப்படும் நிலை உள்ளது. தங்கள் மகள்கள் வெளியே செல்வதைப் பற்றி பெற்றோர் கவலைப்படுகிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்பார்வையில் மக்களிடம் மிரட்டி பணம் பறித்தல், துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
டில்லியை வன்முறையின் மையமாக பா.ஜ., மற்றும் உள்துறை அமைச்சகம் மாற்றிவிட்டன. சட்ட அமலாக்கத்தை பா.ஜ., தவறாக நிர்வகித்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பில் இருந்தாலும், தன் பொறுப்புகளை நிறைவேற்ற டில்லி காவல்துறை தவறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பிப்ரவரியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய தலைநகரில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

