மாட்டுக்கொழுப்பு விவகாரம் எதிரொலி; திருப்பதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை
மாட்டுக்கொழுப்பு விவகாரம் எதிரொலி; திருப்பதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த தடை
ADDED : செப் 27, 2024 10:00 AM

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்த விவகாரம் எதிரொலியாக, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், திருப்பதியில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது' என, முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். ஆய்விலும் இது உறுதி செய்யப்பட்டது.
திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகளவில் திருப்பதிக்கு தரிசனம் செய்ய வருகை தருவதால் பாதுகாப்பு கருதி, மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு 30ஐ அக்டோபர் 24ம் தேதி வரை அமல்படுத்தி மாவட்ட எஸ்.பி., சுப்பாராயுடு உத்தரவிட்டார்.
இந்த சட்டத்தின் மூலம் போலீசாரின் அனுமதி பெறாமல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. 'தடையை மீறி பேரணி, பொதுக் கூட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எஸ்.பி., எச்சரிக்கை விடுத்துள்ளார்.

