கொல்லம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த மூவருக்கு 'ஆயுள்'
கொல்லம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த மூவருக்கு 'ஆயுள்'
ADDED : நவ 08, 2024 01:38 AM

கொல்லம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், மதுரையைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முன்சீப் நீதிமன்றம் அருகே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பில் இருந்த டிபன் பாக்ஸ் குண்டு, 2016 ஜூன் 15ம் தேதி வெடித்தது. இது தொடர்பாக கேரள போலீசார் விசாரித்து வந்தனர்.
சட்டவிரோத நடவடிக்கை
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் அலி, ஷம்சுன் கரீம் ராஜா, தாவூத் சுலைமான் ஆகியோருக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், ஆயுள் தண்டனை விதித்து, கொல்லம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி கோபகுமார் நேற்று உத்தரவிட்டார்.
இதைத் தவிர, கொலை முயற்சி பிரிவின் கீழ், தலா, 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மூவருக்கும், தலா, 30,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி, ஒசாமா பின் லேடனின் அல் - குவைதா பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டார். இதைஅடுத்து, தமிழகத்தில், 'பேஸ் மூவ்வென்ட்' என்ற அமைப்பை உருவாக்கினார்.
இதன் வாயிலாக பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டார்.
இதற்காக ஷம்சுன் கரீம் ராஜா, தாவூத் சுலைமான் உட்பட பலரை தன் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
இவர்கள், 2015ல் இருந்து பல நீதிமன்ற வளாகங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திஉள்ளனர்.
விசாரணை
மைசூரு குண்டுவெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. அந்த வழக்கில், இந்த மூவரும், 2016 நவ., 28ல் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், மற்ற நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் அப்பாஸ் அலி, மதுரையில் உள்ள தன் வீட்டில் வெடிகுண்டுகளை தயாரித்ததும் தெரியவந்தது.

