கர்நாடகாவில் சோகம்: பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் சோகம்: பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு
ADDED : செப் 13, 2025 07:52 AM

பெங்களூரு: கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் ஊர்வலத்திற்குள் புகுந்தது. ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் மோதி, விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் கூட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர், போலீசார் விரைந்தனர்.
இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சித்தராமையா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.