ADDED : செப் 24, 2024 07:13 AM

தட்சிண காசி' என்று அழைக்கப்படும் கலசேஸ்வரா கோவில், சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா, கலசா சாலையில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை கடந்து செல்லும் ரம்மியமான இயற்கை காட்சிகள், காபி, ஏலக்காய் செடிகளை பார்த்து கொண்டே செல்வது மனதிற்கும் இதமாக இருக்கும்.
வெள்ளி கதவு
இயற்கை அன்னையின் மடியில் அருள் பாலிக்கும் இந்த கோவில், பத்ரா ஆற்றங்கரையில் உள்ளது. அகஸ்தியர் முனியால் கட்டியதாக நம்பப்படுகிறது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் படி, 1,154ல் கட்டப்பட்டதாக சில கல்வெட்டுகள் கூறுகின்றன.
மூலஸ்தானத்தை விதர்பா சிற்றரசர் ஸ்ருத் பிந்து நிறுவியதாக கூறப்படுகிறது. அதன்பின், 16ம் நுாற்றாண்டில் கெலதி மற்றும் கார்காலா நாயக்கர்கள் மேம்படுத்தி உள்ளனர். பின், மைசூரு மன்னர்கள் வெள்ளி கதவை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
'தட்சிண காசி'
சுவாமிக்கு, தங்க கிரீடத்தை சோமசேகர் நாயக்கர் சமர்ப்பணம் செய்துள்ளார். வசிஷ்டா, நாகா, கோடி, ருத்ரா, அம்பா ஆகிய பஞ்ச புனித குளங்கள் இருப்பது சிறப்பு.
ஸ்கந்த புராணத்தில், கலசேஸ்வரா கோவில் 'தட்சிண காசி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள லிங்கம் பானை அல்லது கலசம் வடிவில் காட்சி அளிக்கிறது. இதனால், கலசேஸ்வரா என்று அழைக்கப்படுகிறது.
தியான மண்டபம், நிகழ்ச்சி அரங்கம், பழங்கால கல்வெட்டுகளை காணலாம்.

