ADDED : டிச 26, 2025 01:01 AM

விசாகப்பட்டினம்: நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன்பெற்ற, 'கே - -4' ஏவுகணையை நம் கடற்படை நேற்று வெற்றிகரமாக சோதித்தது.
மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம், 'கே - -4' ஏவுகணையை தயாரித்தது. இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., துாரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இது, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட எரிபொருளால் இயங்கும், 'கே - 4' ஏவுகணை, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே வங்க கடலில் நேற்று சோதிக்கப்பட்டது. 'ஐ.என்.எஸ்., அரிகாட்' நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இந்தச் சோதனையில், 'கே- - 4' ஏவுகணை அனைத்து தொழில்நுட்ப அளவீடுகளையும் துல்லியமாக பூர்த்தி செய்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அவர்கள் கூறியதாவது: 'கே -- 4' முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஐ.என்.எஸ். அரிகாட்' நீர்மூழ்கி கப்பலில் இது பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நீர்மூழ்கி, கடந்த ஆண்டு ஆகஸ்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது, 6,000 டன் எடை கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்.
இதற்கு முன், நம் கடற்படை பயன்படுத்தி வந்த முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான, 'ஐ.என்.எஸ்., அரிஹந்த், 750 கி.மீ., துாரம் செல்லும் கே - -15 ஏவுகணைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

