ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
UPDATED : செப் 12, 2025 03:56 AM
ADDED : செப் 12, 2025 03:55 AM

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு கால நிர்ணயம் விதித்த விவகாரம் தொடர்பான வழக்கில், 10 நாட்களாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு கால வரம்பு நிர்ணயம் செய்தது.
இந்த தீர்ப்பு குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, 14 கேள்விகளை எழுப்பி, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை அப்படியே வழக்காக மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், அதை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், இந்த மனு மீதான விசாரணை கடந்த, 10 நாட்களாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிந்தது.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
-டில்லி சிறப்பு நிருபர்-