UPDATED : ஜன 01, 2026 10:44 PM
ADDED : ஜன 01, 2026 06:30 AM

அரசியல்வாதிகளின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை என்றாலே மீடியாக்களுக்கு கொண்டாட்டம்தான். அதுவும் 24 மணி நேர டிவி சேனல்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.
நீதிபதி தும்மினால் கூட உடனே ட்வீட் வருகிறது…டிவியிலும் ப்ளாஷ் செய்தி போட்டு விடுகின்றனர். இது அனைத்து மொழி சேனல்களுக்கும் பொருந்தும்.
முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. ஏ.கே. சிக்ரி என்கிற நீதிபதி தலைமையில் பென்ச் இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் எது நடந்தாலும் அதை பரபரப்பாக்கி செய்திகளை ப்ளாஷ் செய்து கொண்டிருந்த பரபரப்பிற்கு பெயர் போன கேரள நியூஸ் சேனல்கள். உணவு இடைவேளையின் போது இந்த விஷயம் நீதிபதி சிக்ரிக்கு தெரியவந்தது.
ஒரு டெக்னிக் அது!
மதியம் விசாரணையை ஆரம்பித்த உடன் அவர் சொன்னார்- “பத்திரிகையாளர்களுக்கு, குறிப்பாக கேரள பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். அநாவசியமான விஷயங்களை ப்ளாஷ் செய்து பரபரப்பு ஏற்படுத்த வேண்டாம்… விசாரணையின் போது நாங்கள் கேள்விகள் கேட்போம்…
அதற்கு கமெண்டும் அடிப்போம். ஆனால் நாங்கள் என்ன சொல்கிறோமே அதுவே தீர்ப்பாகி விடாது. வக்கீல்களிடமிருந்து பதிலை வாங்க நாங்கள் மேற்கொள்ளும் ஒரு டெக்னிக் அது…எனவே இறுதி முடிவிற்கு பொறுத்திருங்கள்...” அதன் பிறகு ப்ளாஷ் மற்றும் ப்ரேக்கிங் நியூசிலிருந்து கொஞ்ச நேரம் அமைதி. மறுநாள் மறுபடியும் வேலையை ஆரம்பித்துவிட்டனர் கேரள டிவிக்கள்.
ஜெயலலிதா அப்பீல்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா குற்றவாளியாக பெங்களூரு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். இது நடந்தது செப்டம்பர் 2014ல். உடனே முதல்வர் பதவியிலிருந்து அவர் இறங்க ஓ.பி.எஸ் முதல்வரானார். கீழ் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ஜெயலலிதா. தனக்கு பெயில் வேண்டும் என கோரிக்கை வைக்க, நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ஜெயலலிதா.
இந்தியாவின் டாப் வக்கீல்
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மிகுந்த மரியாதை தரும் சீனியர் வக்கீல்கள் சிலர். கேசவன் பராசரன், பாலி நாரிமன், சோலி சொராப்ஜி, கே.கே.வேணுகோபால் ஆகியோர் இந்த மரியாதை பட்டியலில் உள்ள சிலர். இவர்கள் வயதானவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல், பல அரசியல் சாசன வழக்குகளில் ஆஜராகி அதிரடி தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிட உதவியவர்கள் என்பதால் இவர்கள் மீது தனிப்பட்ட மரியாதை நீதிபதிகளுக்கு உண்டு.
சுவாரஸ்யம்
சோலி சொராப்ஜி இப்போது உயிரோடு இல்லை. சீனியர் வக்கீல் பாலி நாரிமன்தான் ஜெயலலிதாவிற்கு ஆஜரானார். இதில் ஒரு சுவாரஸ்யம், இதே பாலி நாரிமன் ஜெயலலிதா அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜெ., அரசால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்காக ஆஜராகியவர் பாலி நாரிமன். தமிழக அரசை, குறிப்பாக ஜெயலலிதாவை கடுமையாக தன் வாதங்களின்போது விமர்சித்தவர் இந்த நாரிமன். கடைசியில் ஜெயேந்திரருக்கு பெயில் வாங்கிக் கொடுத்தவரும் இந்த பாலி நாரிமன் தான். இது நடந்தது ஜனவரி 2005ல்.
கிடைத்தது பெயில்
ஜெயலலிதாவின் அப்பீல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது ஜாமின் வழங்குவதுதான் வழக்கம்…ஜாமின் கொடுக்காவிட்டால் அது ஜெயலலிதாவின் உரிமைகளை பாதிக்கும் என நாரிமன் வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து மற்றும் இரண்டு நீதிபதிகள் ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கியது.
ஆனால் வேறொரு விஷயத்தையும் செய்தார் நீதிபதி தத்து. ஜாமின் வாங்கிக் கொண்டு ஜெ.,வும் மற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனு விசாரணையை தாமதம் செய்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு புதிய உத்தரவும் போடப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு தனி அமர்வை ஏற்படுத்தி தினந்தோறும் ஜெயலலிதா அப்பீலை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
தவிர, இந்த விசாரணை ஒழுங்காக நடைபெறுகிறதா எனவும் உச்ச நீதிமன்றம் கண்காணித்தது…இதுவரை இப்படி நடந்தது கிடையாது…மிகவும் சரியான உத்தரவு என பல சீனியர் வக்கீல்கள் அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.
பணம் வாங்கிவிட்டார் நீதிபதி
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே இப்படி ஒரு நினைப்பு…பேச்சு… ஒருவருக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ, நிறுவனத்திற்கோ சாதகமாக தீர்ப்பு வெளியானால், 'பெரிசா வாங்கிட்டாங்க போலிருக்கு' என்று பேசுவார்கள்.
எந்த ஒரு நீதிமன்றமும் ஒரு வழக்கை எடுத்துக் கொண்டால் தங்கள் முன் என்ன ஆவணங்கள் இருக்கின்றதோ அதை வைத்துதான் தீர்ப்பு தர முடியும். டிவிக்களில் வரும் விவாதங்களை வைத்து தீர்ப்பு எழுத முடியாது.
எனவே யாராவது ஒருவர் நிச்சயம் வழக்கில் வெற்றி பெற்றுத்தான் ஆக வேண்டும்... ஆனால் நம் மக்களின் வாய் சும்மாவே இருக்காது. இப்படித்தான் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியவுடன் பலரும் பலதும் பேசினார்கள். 'கோடிக்கணக்கில் கை மாறிவிட்டது' என்றனர்.
மனசாட்சி
இதை தலைமை நீதிபதி தத்து முன்னாலேயே சொன்னார் ஒரு தமிழக வழக்கறிஞர். “பலரும், ஏன் மீடியாவில் கூட இதைப் பற்றி பேசுகின்றனர். இந்த விஷயத்தை விசாரிக்க நீங்கள் உத்தரவிட வேண்டும்” என சொன்னார். ஆனால் தலைமை நீதிபதி, “ நான் என்னுடைய மனசாட்சிக்குத்தான் பயப்பட வேண்டும்…வேறு யாருக்கும் இல்லை” என சொல்லி முடித்துவிட்டார்.
நான் வேங்கடவனின் பக்தன்
இங்கே தலைமை நீதிபதி தத்துவைப் பற்றி சொல்லியாக வேண்டும். இவருடைய முழுப் பெயர் ஹண்டியால லஷ்மி நாராயணசாமி தத்து. கர்நாடகவின் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆசிரியர் மகனாக பிறந்த இவர் தலைமை நீதிபதியானார். நீதிபதிகள் யாருமே பத்திரிகையாளர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள், பழகவும் மாட்டார்கள். காரணம்- எதையாவது பேசினால் எழுதி விடுவார்களோ என்கிற பயம்… தவிர, யாருடனும் அதிக நெருக்கம் இல்லாமல் இருந்தால்தான் நடு நிலையான தீர்ப்பு வழங்க முடியும் என்கிற எண்ணமும் ஒரு காரணம்.
அதே சமயம் எந்த பத்திரிகையாளர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்களோ அவர்களிடம் பேசுவார்கள். சிலர் மனம் விட்டும் பேசுவார்கள். ஆனால் அனைத்தும் ஆப் தி ரிகார்ட்தான். இப்படி இவர்களின் நம்பிக்கை லிஸ்டில் நானும் இருந்தேன். தத்துவை பல முறை அவரது சேம்பரில் சந்தித்திருக்கிறேன். தலைமை நீதிபதியின் கோர்ட் அறைக்கு பின்புறம் அவரது சேம்பர் இருக்கும். நீதிபதி அழைத்தாமல் அங்கு மட்டுமே செல்ல முடியும்; இல்லையெனில் யாரும் போக முடியாது.
தீர்ப்புகள்
ஜெ வழக்கிற்கு பிறகு தத்துவின் சேம்பரில் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம். “ஜெயலலிதாவிற்கு ஜாமின் கொடுத்து நீங்கள் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதே” என்றேன்.
“நீங்களும்தான் நாரிமன் வாதம் செய்யும் போது கோர்ட்டில் இருந்தீர்கள். சட்டத்தை மீறி நான் எதையும் செய்யவில்லை. ஒருவருடைய அப்பீல் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது ஜாமின் வழங்குவதில் தவறில்லை…பல தீர்ப்புகள் இப்படி சொல்கின்றன.
அதைத்தான் நான் செய்தேன். இந்த வழக்கில் மனுதாரர் ஜெயலலிதா இல்லாமல் வேறொருவர் இருந்தால் நீங்கள் இப்படி கேட்டிருப்பீர்களா” என கேட்டார்.
ஒரு கணம் அமைதியானேன்… “நிச்சயம் கேட்டிருக்க மாட்டேன்” என உண்மையைச் சொன்னேன்.
வேங்கடவனின் சிறந்த பக்தர் தத்து. இவரது வீட்டில் பூஜை அறையில் எங்கு பார்த்தாலும் திருப்பதி வெங்கடாஜலபதிதான். ஒவ்வொரு வருடமும் பகவானை தரிசிக்க மேல் திருப்பதிக்கு கீழிருந்து நடந்துதான் போகிறார் தத்து.
- அ.வைத்தியநாதன்

..............இந்த தொடரின் அடுத்த கட்டுரை, ஜன.,5ம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) தினமலர் இணையதளத்தில் வெளியாகும்.

