மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் தேய்மானம்; பழுது பார்க்க 4 மணி நேரம் ஆனதால் பயணிகள் அவதி
மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் தேய்மானம்; பழுது பார்க்க 4 மணி நேரம் ஆனதால் பயணிகள் அவதி
UPDATED : ஆக 05, 2025 07:09 AM
ADDED : ஆக 04, 2025 09:23 PM

போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரிலிருந்து மும்பைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தின் டயர் குறைந்த அழுத்தம் காரணமாக தேய்மானம் ஆனதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரிலிருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தை விமானி ஆய்வு செய்தார். அப்போது விமானத்தின் டயர் குறைந்த அழுத்தம் காரணமாக தேய்மானம் அடைந்து இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டறிந்தார்.
இதையடுத்து விமானத்தின் டயரை பழுதுபார்க்கும் பணி நடந்தது. டில்லியில் இருந்து ஜபல்பூருக்கு டயர் கொண்டுவரப்பட்டு விமானத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தப் பணியை செய்து முடிப்பதற்கு நான்கு மணி நேரம் ஆனது. இதனால் பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
“இண்டிகோ விமானம் மதியம் 12.40 மணிக்கு மும்பைக்குத் திரும்புவதாக இருந்தது, ஆனால் டயர் பிரச்னை காரணமாக தாமதமானது. பின்புற டயர் மாற்றப்பட்ட பிறகு மாலை 5.30 மணிக்கு மும்பைக்குத் திரும்பியது” என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீப காலமாக விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டு வருவது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.