எனக்கும், பா.ஜ.,வுக்கும் தான் போட்டி சுயேச்சை வேட்பாளர் வினய்குமார் கணிப்பு
எனக்கும், பா.ஜ.,வுக்கும் தான் போட்டி சுயேச்சை வேட்பாளர் வினய்குமார் கணிப்பு
ADDED : ஏப் 25, 2024 05:37 AM

தாவணகெரே, : ''தாவணகெரேயில் பா.ஜ., வேட்பாளருக்கும், எனக்கும் இடையில் தான் நேரடி போட்டி இருக்கும்,'' என, சுயேச்சை வேட்பாளர் வினய்குமார் கூறி உள்ளார்.
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் நடத்தும் வினய்குமார், தாவணகெரேயில் காங்கிரஸ் சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று அவர் அளித்த பேட்டி:
தாவணகெரேயில் பா.ஜ., வேட்பாளர் காயத்ரிக்கும், எனக்கும் தான் நேரடி போட்டி இருக்கும். காங்கிரஸ் வேட்பாளர் கணக்கில் இல்லை. அவரது குடும்பத்தில் ஒரு அமைச்சர், ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். தாவணகெரே மக்கள் குடும்ப அரசியலுக்கு எதிராக உள்ளனர். சுயேச்சையாக போட்டியிடும் வினய்குமார் வெற்றி பெற முடியுமா என்று சிலர் பேசுகின்றனர்.
வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தாவணகெரேயில் இதுவரை 2 குடும்பங்களுக்கு இடையிலான தேர்தல் தான் நடந்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்தபோது என்னுடன் வந்த கூட்டத்தை பார்த்து, பா.ஜ.,வினர் வாயடைந்து போயினர்.
என்னுடன் இருப்பவர்களை மிரட்டும் முயற்சியும் நடக்கிறது. யார் என்ன செய்தாலும், தொகுதி மக்கள் என்னுடன் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

