பங்கார்பேட்டை பகுதியில் சீதாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு
பங்கார்பேட்டை பகுதியில் சீதாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு
ADDED : அக் 15, 2024 12:15 AM

பங்கார்பேட்டை : பங்கார்பேட்டை, பூதிக்கோட்டை, முல்பாகல் ஆகிய இடங்களில், 'கஸ்டர்ட் ஆப்பிள்' என அழைக்கப்படும் சீதாப்பழம் அதிக அளவில் காய்த்து குலுங்குகிறது.
பங்கார்பேட்டை தாலுகாவில் பல நுாறு ஏக்கர் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களில் சீதாப்பழம் செடிகள், இயற்கையாகவே வளர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், சீதாப்பழம் பறித்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்; இதன் மூலம் வருமானமும் கிடைக்கிறது.
இயற்கையாகவே இலவசமாக கிடைக்கிற சீதாப்பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. பெங்களூரு உட்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு, இப்பழத்தின் தேவை அதிகமாகவே உள்ளது.
பங்கார்பேட்டை தாலுகாவில் கத்ரினத்தா, கோடகுர்கி காலனி, பீமகானஹள்ளி, ஏரல் பலம்மந்தி, தின்னுார், பலமடுகு உட்பட பல கிராமங்களில் மூன்று நான்கு மாதங்களாக சீதாப்பழம் கிடைத்து வருகிறது.
குன்றுகள், மலைகள் உள்ளிட்ட வனப் பகுதிகளில் பெருமளவு கிடைக்கிறது. சீதா காய்களை கிராம மக்கள் பறித்து, பழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதை பறிப்பதற்காக அதிகாலையிலேயே, வனப்பகுதிக்கு பெண்கள் செல்வதை காணலாம்.
பெங்களூருக்கு 20 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி 300 -- 400 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பங்கார்பேட்டை, கோலார், தங்கவயலில் ஒரு கிலோ 50 -- 60 ரூபாய்க்கு சில்லறை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
கிராம பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஒவ்வொருவரும் தினமும் 3-4 பெட்டி சீதாப்பழங்களை சேகரித்து விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து நேரடியாக பெங்களூரு, ஹைதராபாத், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இதில் எவ்வித ரசாயனமும் கிடையாது; இந்த பழத்தில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, நார்சத்து உள்ளது. இப்பழம் சாப்பிடுவதால், மூட்டு வலிக்கு நிவாரணி, எலும்பு பலம் பெறும், கண்பார்வை மேம்படும், குடல் பாதுகாப்பு, அல்சர் குணமாகும், அசிடிட்டி பிரச்னை இல்லை. இயற்கையின் வரப்பிரசாதம் என்பதால் பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

