மோடி 3.0-வில் மிரளவைக்கும் பொருளாதார வளர்ச்சி: 100 நாளில் அப்படியொரு முன்னேற்றம்
மோடி 3.0-வில் மிரளவைக்கும் பொருளாதார வளர்ச்சி: 100 நாளில் அப்படியொரு முன்னேற்றம்
UPDATED : செப் 18, 2024 08:07 PM
ADDED : செப் 18, 2024 05:59 PM

புதுடில்லி: சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) நடப்பு நிதியாண்டில் (2024-25) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக இருக்கும் என கடந்த ஏப்ரலில் கணித்திருந்தது. ஆனால், பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றதும், இந்த மதிப்பு அதிகரித்தது. அதாவது, ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்றதும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், திட்டங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு கடந்த ஜூலையில் ஐ.எம்.எப் வெளியிட்ட 'வேர்ல்டு எகானமிக் அவுட்லுக்' அறிக்கையில் ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி), மேலும் 20 புள்ளிகள் உயர்ந்து 7 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியால் என்னவெல்லாம் நடக்கும்?
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளரும் போது, வணிகங்கள் விரிவடைந்து வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் கிடைக்கப்பெறும். இதனால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும். 2017-18 முதல் 2021-22 வரை இந்தியாவில் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
கொரோனா போன்ற கொடிய தொற்று காலத்திலும் கூட சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் செயல்திறனே காரணம். பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்று 100 நாட்களில் மத்திய அரசு மேற்கொண்ட பணிகள், கொண்டுவரப்பட்ட திட்டங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என அனைத்தும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றன.
இதே வேகத்தில் இந்திய பொருளாதாரம் செல்லும் பட்சத்தில், விரைவில் மோடியின் கனவான 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

