வெனிசுலாவில் நிகழ்ந்ததைப் போல பாகிஸ்தானில்.... பிரதமர் மோடிக்கு ஓவைசி வலியுறுத்தல்
வெனிசுலாவில் நிகழ்ந்ததைப் போல பாகிஸ்தானில்.... பிரதமர் மோடிக்கு ஓவைசி வலியுறுத்தல்
UPDATED : ஜன 04, 2026 05:02 PM
ADDED : ஜன 04, 2026 04:09 PM

மும்பை:
வெனிசுலாவில் நடந்ததைப் போல, பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி, மும்பை
தாக்குதல் பயங்கரவாதி மசூத் அசாரை சிறைபிடிக்க வேண்டும் என்று பிரதமர்
மோடிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருட்கள்
கடத்தல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ்
மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து, புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளது.
நேற்றைய தினம் சரியான திட்டமிடலுடன், வெனிசுலாவுக்குள் நுழைந்து,
பாதுகாவலர்களை சுட்டு வீழ்த்தி, அதிபர் மதுரோவையும், அவரது மனைவியையும்
சிறைபிடித்தது.
சிறையில் அடைக்க அமெரிக்க
அதிகாரிகள் நிக்கோலஸ் மதுரோவை அழைத்து செல்லும் வீடியோக்கள் தொடர்ந்து
வெளியாகி வருகின்றன. வெனிசுலாவில் நடந்த சம்பவத்திற்கு ரஷ்யா, சீனா, ஈரான்
உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா
தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த
நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலை நடத்திய போல, பாகிஸ்தானுக்கு
ராணுவத்தை அனுப்பி, மும்பை தாக்குதல் பயங்கரவாதி மசூத் அசாரை சிறைபிடிக்க
வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி
வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடந்த
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ராணுவத்தை
வெனிசுலாவுக்கு அனுப்பி, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்த செய்தியை
நாம் அறிவோம். வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்நாட்டு அதிபரை அமெரிக்கா
சிறைபிடித்ததைப் போல, பாகிஸ்தானுக்கு ராணுவத்தை பிரதமர் மோடி அனுப்ப
வேண்டும். மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார்
மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதிகளை சிறைபிடித்து
கொண்டு வர வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் இதை செய்ய முடிகிறது
என்றால், பிரதமர் மோடியாலும் இதை செய்ய முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

