ஜார்கண்ட் சட்டசபை இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி போட்டி
ஜார்கண்ட் சட்டசபை இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி போட்டி
ADDED : ஏப் 25, 2024 08:22 PM

ராஞ்சி: ஜார்கண்டில் ஒரு தொகுதிக்கு நடக்க உள்ள சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில மோசடி மற்றும் சுரங்க மோசடி புகார்கள் விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் கடந்த ஜன., 31ல் கைது செய்தனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சாம்பை சோரன் முதல்வராக பதவியேற்றார்.
தற்போது, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் ஹேமந்த், அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் தேர்தலில் ஜந்தாம் கட்டமாக வரும் மே 20-ம் தேதி ஜார்க்கண்ட் மாநில கேண்டி சட்டசபை தொகுதியுடன் லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.இதில் கேண்டி சட்டசபை தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா போட்டியிட உள்ளதாக இன்று கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

