ADDED : பிப் 08, 2024 12:42 AM

ராஞ்சி: நில அபகரிப்பு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் காவலை ஐந்து நாட்கள் நீட்டித்து ராஞ்சியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், நில அபகரிப்பு வழக்கில் ஜன., 31ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஞ்சியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டு இருந்த அவரது ஆதரவாளர்கள், 'ஹேமந்த் சோரன் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினர். அவர்களை பார்த்து கையசைத்த படி ஹேமந்த் உள்ளே சென்றார். அமலாக்கத்துறை அதிகாரிகள், மேலும் ஏழு நாட்கள் காவல் வேண்டும் என கேட்டனர். அதற்கு ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

