ADDED : பிப் 18, 2025 05:56 AM
'கோல்டு மைன்ஸ்' முன்னாள் தொழிலாளர் வழக்கில் ஹைகோர்ட், 2001 முதல் 6 சதவீத வட்டியுடன் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அந்த தொகையை மைன்ஸ் நிர்வாகம் இன்னும் வழங்கல.
இதனை எதிர்த்து சட்ட அவமதிப்பு வழக்கு தொடருவதாக, ஹைகோர்ட் வக்கீல் ஒருத்தர் தெரிவித்திருக்காரு. கோல்டு மைன்ஸ் நிர்வாகம், கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தடை வாங்கவில்லை. இதனால் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாலாற்றின் நீரை பேத்தமங்களா ஏரியில் நிரப்பி, தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, 'மினரல்' வாட்டரை மிஞ்சும் வகையில் கோல்டு சிட்டி தொகுதி முழுக்க சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த தண்ணீர் நின்னு போச்சு.
கோல்டு தொகுதியின் குடிநீர் வசதிக்கு எரகோள் அணை நீர் வரும் என்று அசெம்பிளிகாரர் சொன்னாரு. ஆனால் அப்படி ஒரு திட்டமே இல்லையென அதிகாரிகள் சொல்றாங்க. அப்படியானால் கோல்டு சிட்டியில் நிலத்தடி நீர் தான் கதி என்றாகி விட்டது.
சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீரை அப்படியே பயன்படுத்துவதால் பல வியாதிகள் வாட்டி வதைக்குது. இதை தடுக்க எந்த திட்டமும் இல்லை. கே.சி., வேலி நீரை வழங்கப் போறோமுன்னு, 100 கோடி ரூபாயில் இரும்பு பைப்புகளை பதித்தாங்க; அந்த பைப்புகளுக்கும் வேலை இல்லாமல் உள்ளது.
கோலார் மாவட்டத்தில் நிலம் ஆக்கிரமிப்பை தடுக்க காலம் கடந்து ஞானோதயம் பிறந்திருக்குதாம். வனத்துறை நிலம் ஆக்கிரமிப்பில் அரசியல் தலைவர்கள் இருந்ததால் விட்டு வைத்திருந்தாங்க. கோர்ட் உத்தரவில் சர்வே நடத்தி கதையை முடிச்சு வச்சாங்க.
அதனை தொடர்ந்து ஏரிகள் நிலம் காணாமல் போனதென துருவி துருவி சர்வே நடத்தி வராங்க. பல ஏரிகள் அரசியல் வாதிகள் வசம் தான் இருக்குதென விபரம் தெரிய வந்திருக்கு. குன்று, மலை, குவாரிகள் கூட பொதுமக்கள் யாரும் அபகரிப்பு செய்யல. தலைவர்கள் வசம் தான் உள்ளதாக பலரும் சொல்றாங்க. இதனால் கோளாறான கோலாரிலும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆப்பு வைக்கும் காலம் கனிந்திருக்குது.
தான் இட்டது தான் சட்டம் என கேட்பாரற்று, தெனாவட்டாக கோல்டு சிட்டியை, ஒரு 'டூரிஸ்ட் பிளேஸ்' போல கருதி வந்த மக்கள் தலைவருக்கு, தலைவலியை ஏற்படுத்த எல்லா கட்சியும் ஒருங்கிணைத்து, 'பாதுகாப்பு இயக்கம்' ஆரம்பிச்சிருக்காங்க.
இதனால் கவனிக்காமல் இருந்த பிரச்னைகளுக்கு, உயிர் கிடைச்சிருக்குதாம். பாலங்கள், கோவில் கோபுரங்கள் என பல கோடியில் உருவாக்க பூமி பூஜை போடுறாங்க.
மூடி கிடந்த அரசு மருத்துவமனையில், புதிய அறைகள் திறந்து உள்ளிருப்பு நோயாளிகளை தங்க வச்சிருக்காங்க. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஒரே அறையில், 'இடுப்பில்' ஊசி போடுவதை நிறுத்தி, தனித்தனி அறையில் போடுவதற்கு ஏற்பாடு செய்திருக்காங்க.
நான்கு ஆண்டுக்கு முன்னாடி, சாலை அகலப்படுத்தும் பணியை துவங்கினவங்க, அதை மறந்துட்டாங்க. இப்போ அவசர அவசரமாக ஜல்லி, தார் போடும் வேலையை துவங்கி இருக்காங்க. அதுவும், நடைபாதை இல்லாம பணி நடக்குது.
