சர்ச்சையின் மறு பெயர் சாம் பிட்ரோடா: சீனாவை மதிக்க வேண்டும் என்கிறார்!
சர்ச்சையின் மறு பெயர் சாம் பிட்ரோடா: சீனாவை மதிக்க வேண்டும் என்கிறார்!
ADDED : பிப் 17, 2025 01:06 PM

புதுடில்லி: ''சீனாவை நம்பர் 1 எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும். அந்த நாட்டை மதிக்க வேண்டும்,'' என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவரான சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
சாம் பிட்ரோடா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர். முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருக்கு நெருக்கமாக பணியாற்றியவர். ராகுலுக்கு குருநாதர் போன்றவர்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வைப்பது அவருக்கு வாடிக்கை.
அவர், இந்தியாவின் கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் வசிப்பவர்கள் வெள்ளையர் போலவும், தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் உள்ளனர் என்றார்.
இப்படி தேர்தல் காலத்தில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகும், அவ்வப்போது ஏடாகூடாமாக பேசி, காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குவது அவருக்கு வாடிக்கை.
தற்போது அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: அமெரிக்கா ஒரு எதிரியை உருவா்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளது. சீனாவை நம்பர் 1 எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்.
இந்தியா- சீனா எல்லைப் பிரச்னை மிகவும் பெரிதாகி விட்டது. சீனாவின் அச்சுறுத்தல் எனக்குப் புரியவில்லை. சீனாவின் வளர்ச்சியை நாம் மதிக்க வேண்டும். இந்த வளர்ச்சியை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஏழை நாடுகள் தங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும்.
வளர்ந்த நாடுகள் வயதான மக்கள் தொகை கொண்ட நாடாக மாறி வருகிறது. அனைத்து நாடுகளும் ஒன்றுபட தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும். ஜனநாயகம் என்பது தேர்தல்களைப் பற்றியது அல்ல. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்பது இன்று நம்மிடம் இல்லை.
இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீதித்துறை, பாதுகாப்பு, காவல்துறை, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படவில்லை. நான் ஒரு பல்கலைக் கழகத்திற்கு அழைக்கப்பட்டால், துணைவேந்தர் பீதி அடைகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

