இந்திய பிரஜை என பொய் சொன்ன முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு அபராதம்
இந்திய பிரஜை என பொய் சொன்ன முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு அபராதம்
ADDED : டிச 10, 2024 02:17 AM

ஹைதராபாத் : தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சென்னமனேனி ரமேஷ், ஜெர்மனி நாட்டு குடிமகன் என உறுதியானதை அடுத்து, அவருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன், அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திராவில், 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில், வெமுலவாடா தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் சென்னமனேனி ரமேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜெர்மனி நாட்டு குடிமகனான இவர், உண்மை தகவல்களை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகக் கூறி, அவரிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஆதி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றாலும், ஓட்டளிக்க வேண்டும் என்றாலும் அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
அவர் இந்திய குடியுரிமை பெற வேண்டுமெனில், குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த பின், தொடர்ச்சியாக ஓராண்டு இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
'ஆனால், ஜெர்மனி பாஸ்போர்ட் வைத்துள்ள ரமேஷ், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த ஓராண்டுக்குள் வெளிநாடு சென்று விட்டார்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த சூழலில், 2010 - 2018 வரை நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட மூன்று தேர்தல்களில், வெற்றி பெற்று ரமேஷ் எம்.எல்.ஏ., ஆனார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பி.ஆர்.எஸ்., சார்பில் போட்டியிட்டு ரமேஷ் தோல்வி அடைந்தார்.
இதற்கிடையே, ஸ்ரீனிவாஸ் தொடர்ந்த வழக்கில் 2020ல் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த விளக்க மனுவில், 'தேர்தல் விண்ணப்பத்தில் குடியுரிமை விவகாரத்தில் உண்மையை மறைத்ததன் காரணமாக, ரமேஷின் இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் ஜெர்மனி பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கப்பட்டது தொடர்பான ஆவணத்தையும், அவர் ஜெர்மனி நாட்டு பிரஜை அல்ல என்பது குறித்த ஆவணத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆனால், அந்த ஆவணங்களை அவர் தாக்கல் செய்ய தவறியதை அடுத்து, தெலுங்கானா உயர் நீதிமன்றம் நேற்று ரமேஷுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது; இதில், 25 லட்சம் ரூபாயை, தேர்தலில் தோல்வியடைந்த ஆதி ஸ்ரீனிவாசுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

