ஈரான் செல்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்க: மத்திய அரசு அறிவுறுத்தல்
ஈரான் செல்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்க: மத்திய அரசு அறிவுறுத்தல்
ADDED : செப் 20, 2025 09:02 AM

புதுடில்லி: ஈரானில் வேலை தேடும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரானில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து, பல இந்தியர்களை மோசடி கும்பல் ஏமாற்றி இருக்கின்றனர். ஈரானில் வேலை தேடும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் .
ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்ட இந்தியரின் குடும்பத்தினரிடம் மோசடி கும்பல் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சிக்கிறது. குறிப்பாக, ஈரான் அரசாங்கம் சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டுமே இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு அல்லது பிற நோக்கங்களுக்காக ஈரானுக்கு விசா இல்லாத நுழைவை உறுதியளிக்கும் எந்தவொரு முகவரும் குற்றக் கும்பல்களுடன் உடந்தையாக இருக்கலாம். எனவே, இதுபோன்ற பொய்யான சலுகைகளை நம்பி இந்தியர்கள் யாரும் இரையாக கூடாது. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.