சரத் பவார் கட்சிக்கு புதிய பெயர் தேர்தல் ஆணையம் ஒப்புதல்
சரத் பவார் கட்சிக்கு புதிய பெயர் தேர்தல் ஆணையம் ஒப்புதல்
ADDED : பிப் 08, 2024 12:46 AM
புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம், அஜித் பவாருக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்ட நிலையில், சரத் பவார் வசம் உள்ள கட்சிக்கு 'தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார்' என்ற பெயரை தலைமை தேர்தல் கமிஷன் நேற்று வழங்கியது.
மஹாராஷ்டிராவில், சரத் பவார் தலைமையில் இயங்கி வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, கடந்த ஆண்டு ஜூலையில் உடைந்தது. அவரின் சகோதரர் மகனான அஜித் பவார், பல எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுடன் தனியாக பிரிந்தார்.
பா.ஜ., -மற்றும் சிவசேனா கூட்டணி அரசில் இணைந்த அவருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அவரின் ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் கேட்டு, தேர்தல் கமிஷனில் அஜித் பவார் மனு அளித்தார். சரத் பவார் தலைமையிலான பிரிவும் மனு கொடுத்தது.
இதை விசாரித்த தேர்தல் கமிஷன், சட்டசபை மற்றும் கட்சியில் பெரும்பான்மையினர் ஆதரவு உள்ளதால், அஜித் பவார் தலைமையிலான அணியே தேசியவாத காங்கிரஸ் கட்சி என, நேற்று முன்தினம் அறிவித்தது. கட்சியின் பெயர், கொடி, மற்றும் அலாரம் கடிகாரம் சின்னம் ஆகியவற்றை, அஜித் பவாருக்கு ஒதுக்கியது.
இதையடுத்து, ராஜ்யசபா தேர்தலை ஒட்டி, கட்சிக்கான புதிய பெயரை உடனடியாக தேர்வு செய்து தரும்படி சரத் பவாரை தேர்தல் கமிஷன் வலியுறுத்தியது.
இதையடுத்து, தன் கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத் சந்திர பவார் என்ற பெயரை அவர் முன்மொழிந்தார். இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் நேற்று ஒப்புதல் வழங்கியது.

