முதியோர், குழந்தையுடன் வருவோர் 18 படிகளின் ஓரத்தில் ஏற அறிவுரை
முதியோர், குழந்தையுடன் வருவோர் 18 படிகளின் ஓரத்தில் ஏற அறிவுரை
ADDED : டிச 21, 2025 03:25 AM
சபரிமலை: 18 படிகளில் ஏறும்போது முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் இரண்டு ஓரங்களிலும் ஏற வேண்டும் என்று போலீஸ் அறிவித்துள்ளது
எந்த சீசனிலும் இல்லாத அளவு நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. படி ஏறுவதற்கு எப்போதும் நீண்ட வரிசை காணப்படுகிறது. படிகளின் இரண்டு ஓரங்களிலும் நின்று போலீசார் பக்தர்களை தள்ளி மேலே ஏற்றி விடுகின்றனர். எவ்வளவு வேகமாக படி ஏற்றினாலும் ஒரு நிமிடத்திற்கு 80 பேர் வரை மட்டுமே ஏற முடிகிறது. இதிலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும் போது தொய்வு ஏற்படுகிறது. இவ்வாறு தொய்வு ஏற்படும் போது பக்தர்களின் வரிசை நீள்கிறது.
முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் கூட்டமாக ஏறும்போது நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அவர்களை மீட்டு ஏற்றுவதற்கு போலீசாரும் சிரமப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு படி ஏறுவதில் சில விதிமுறைகளை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்.
அதன்படி முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் பொறுமையாக நின்று படிகளின் இரண்டு ஓரங்களில் ஏற வேண்டும். அப்போது அவர்களை போலீசார் சுலபமாக மேலே ஏற்றி விடுகின்றனர்.
இதற்கான அறிவிப்புகள் போலீசார் சார்பில் மெக்கா போன் மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

