ஈ.டி., அதிகாரி அங்கித் திவாரி சொந்த ஊர் செல்ல அனுமதி
ஈ.டி., அதிகாரி அங்கித் திவாரி சொந்த ஊர் செல்ல அனுமதி
ADDED : அக் 24, 2024 12:56 AM

புதுடில்லி, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, சொந்த ஊருக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு டாக்டரிடம், 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, மதுரையில் உள்ள ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரி அங்கித் திவாரி, 2023 டிச., 1ல், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அங்கித் திவாரி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் சாட்சியங்களை அழிக்கக்கூடாது; உச்ச நீதிமன்ற அனுமதியின்றி தமிழகத்தை விட்டு செல்லக்கூடாது; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதித்து, மார்ச் 20ல், அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை சுட்டிக்காட்டி, சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு செல்ல அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று விசாரணைக்கு வந்தது.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, சொந்த ஊருக்குச் செல்ல அங்கித் திவாரிக்கு அனுமதி வழங்கி அமர்வு உத்தரவிட்டது.

