ADDED : மார் 19, 2024 06:47 AM

தார்வாட்: தார்வாடில் நேற்று மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் கூறியதாவது:
வறட்சி பாதிப்பால் அவதிப்படும் விவசாயிகளுக்கு, குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கவில்லை. இத்தகைய நேரத்தில் ஓட்டுக் கேட்க கிராமங்களுக்கு வரும் வேட்பாளர்களை வசைபாடி, வரவேற்பு தாருங்கள். ஓட்டுக் கேட்க வரும் அரசியல் கட்சி தலைவர்களிடம், பிரச்னைகளை கூறுங்கள்.
நாட்டில் 70 சதவீதம் உள்ள விவசாயிகள் விளைவிக்கும் உற்பத்திப் பொருட்களுக்கு, நியாயமான விளைச்சல் கிடைக்கவில்லை. நியாயமான விலை நிர்ணிக்கும்படி கேட்டால், விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர்.
ஆனால், 'இரண்டு சதவீதம் உள்ள அரசு ஊழியர்களுக்கு, 58 சதவீதம் ஊதியத்தை உயர்த்த வேண்டும்' என, சிபாரிசு செய்கின்றனர்.
நாட்டுக்கு உணவிடும் விவசாயிகளை, அனாதைகளாக்க கூடாது. இவர்கள் நாட்டுக்கு அடைக்கலம் தருபவர்களாக இருக்க வேண்டும். ஆண்டுக்கணக்கில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, மத்திய அரசு அலட்சியம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதையும் செய்யவில்லை.
கரும்பு விவசாயிகள் வினியோகித்த கரும்புக்கு, சர்க்கரை ஆலைகள் மூன்று மாதங்களாக பணம் கொடுக்கவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களே கரும்பு பணம் பாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு வெட்கம் இல்லையா? ஒரு வாரத்தில் பணம் கொடுக்காவிட்டால், சர்க்கரை ஆலைகளை முற்றுகை இடுவோம்.
காங்கிரஸ் அரசு, வாக்குறுதித் திட்டங்களில் மிதக்கிறது. விவசாயிகள் பலிகடா ஆகின்றனர். தேர்தல் பணிகளில் மாவட்ட கலெக்டர் ஈடுபட்டால், விவசாயிகளின் கதி என்ன? இவர்களின் கஷ்டம், அதிகாரிகளுக்கு புரிந்தால் தான், நியாயம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

