பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ மேலாளர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ மேலாளர் கைது
ADDED : ஆக 13, 2025 07:30 AM

ஜெய்பூர்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ ஒப்பந்த மேலாளரை உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜெய்சால்மரில் சந்தன் பீல்ட் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் செயல்படுகிறது. இதன் அருகே மத்திய பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விருந்தினர் மாளிகை உள்ளது. இதன் மேலாளராக தற்காலிக அடிப்படையில் மகேந்திர பிரசாத் (32) என்பவர் பணியாற்றி வருகிறார். உத்தரகாண்ட மாநிலம், பால்யூனைச் சேர்ந்தவர்.
இவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்ப்பதாக சந்தேகம் எழுந்தது. ரகசிய தகவல்களை சமூக ஊடகம் மூலம் அந்நாட்டுக்கு பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதன்பேரில், அவரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். ரகசியமாக நடைபெற்ற இந்த கண்காணிப்பு நடவடிக்கையில், மகேந்திர பிரசாத் ஏவுகணை, ஆயுத சோதனைகளுக்காக துப்பாக்கிச்சூடு மையத்திற்கு வரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் நடமாட்டத்தை ஐஎஸ்ஐ அமைப்புக்கு பகிர்ந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவரை ராஜஸ்தான் உளவுத்துறை போலீசார், ஜெய்பூரில் உள்ள மத்திய புலனாய்வு விசாரணை மையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரின் செல்போனை கைப்பற்றி தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தினர்.
அப்போது இந்திய ராணுவம் மற்றும் டிஆர்டிஓ பற்றிய முக்கிய தகவல்களை அவர் ஐஎஸ்ஐக்கு பகிர்ந்து, உளவு வேலை பார்த்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, மகேந்திர பிரசாத்தை அவர்கள் கைது செய்தனர்.
இதுகுறித்து ஜெய்பூர் சிஐடி இன்ஸ்பெக்டர் விஷ்ணுகாந்த் கூறியதாவது: மகேந்திர பிரசாத்திடம் நடைபெற்ற விசாரணையில், அவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது கண்டறியப்பட்டுள்ளது. அவரை கைது செய்துள்ளோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முழு விசாரணைக்கு உட்படுத்த உள்ளோம். அடுத்த கட்ட விசாரணை தொடரும் என்றார்.