ADDED : நவ 08, 2024 07:38 AM

மரத்தில் இருக்கும் மாங்காயை குறிபார்த்து கல்லால் அடிப்பதில் சிலருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அதுபோல இலக்கை நோக்கி துப்பாக்கியால் சுடும், துப்பாக்கி சுடும் போட்டியை காண்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். துப்பாக்கி சுடும் போட்டியில் பலர் சாதித்து உள்ளனர். இவர்களில் ஒருவர், இளம் வீராங்கனை திலோத்தமா சென்.
இவரது பூர்வீகம், மேற்கு வங்கத்தின் கோல்கட்டா. ஆனால், இவரது பெற்றோர் சுஜித் சென், நந்திதா ஆகியோர் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கின்றனர். சிறுவயதில் இருந்து விளையாட்டு மீது திலோத்தமா சென்னுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் கைப்பந்து, கராத்தேயில் அதிக ஆர்வம் காட்டினார்.
ஆனால், ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அசத்திய அபினவ் பிந்த்ரா சாதனையால் ஈர்க்கப்பட்ட திலோத்தமாவுக்கு, துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. மகளின் விளையாட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு, வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுத்தார்.
கடந்த 2020ல் பெங்களூரில் உள்ள, ஹாக்கி ஸ்போர்ட்ஸ் மற்றும் பிஸ்டல் அகாடமியில் சேர்ந்தார். ராகேஷ் மன்பட் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இலக்கை துல்லியமாக குறி வைத்து சுடும், திலோத்தமாவின் திறமை ராகேஷ் மன்பட்டை ஈர்த்தது.
கடந்த 2022ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச போட்டியில், திலோத்தமா கலந்து கொள்ள நிதி உதவி செய்தார். அதே ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில், பெண்கள் ஜூனியர் பிரிவில் 10 மீட்டர் துார துப்பாக்கி சூடுதல் போட்டியில், தங்கப்பதக்கம் வென்றார்.
கடந்த ஆண்டு சாங்வோனில் நடந்த, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும், வெள்ளி வென்று அசத்தினார். இந்த ஆண்டுக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஏசஸ் விருதும் பெற்றார்.
தற்போது திலோத்தமாவுக்கு, 16 வயது தான் ஆகிறது. இன்னும் பல ஆண்டுகள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜொலிக்கும் ஆர்வத்தில் உள்ளார் - நமது நிருபர் -
.

