நீதிபதியை பதவி நீக்க கோருவது மிரட்டி பணிய வைக்கும் முயற்சி
நீதிபதியை பதவி நீக்க கோருவது மிரட்டி பணிய வைக்கும் முயற்சி
ADDED : டிச 16, 2025 03:30 AM

ஜபல்பூர்: “சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக நீதிபதிகளை மிரட்டி பணிய வைக்கும் முயற்சி,” என, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.திரிவேதி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உச்சி பிள்ளையார் கோவில் மண்டபத்திலும், தீபத்துாணிலும் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். இதனால், அதன் அருகே உள்ள தர்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.
எனினும், தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கும் தீர்மானத்தை கொண்டுவரக் கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கினர்.
தி.மு.க., - எம்.பி.,க்களின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்ற மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 56 பேர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கே.திரிவேதி கூறியதாவது
இந்த விவகாரம், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானம் கொண்ட வர முயற்சிப்பது முற்றிலும் தவறானது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக, நீதிபதிகளை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது. நீதித்துறையின் மாண்பை கெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி தவிர்க்கப்பட வேண்டும்.
இதனால், நம் நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும். ஒரு நீதிபதி பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலோ, திறனற்றவராக இருந்தாலோ மட்டுமே, அரசியல் சாசனத்தின்படி அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர முடியும்.
அவ்வாறு இருக்க, நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக எப்படி பதவி நீக்கம் கோரும் தீர்மானம் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

