UPDATED : ஜூலை 11, 2025 10:13 PM
ADDED : ஜூலை 11, 2025 09:53 PM

புனே: சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம் செய்யவில்லை என நீதிமன்றத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில், 2023 மார்ச்சில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சுதந்திர போராட்ட வீரர், வீர் சாவர்க்கர் குறித்து அவதுாறாக பேசியதாக, பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து, மஹாராஷ்டிராவின் புனே போலீசில், வீர் சாவர்க்கர் பேரன் சத்யாகி புகார் அளித்தார்.
இதன்படி ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு, புனேயில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி அமோல் ஷிண்டே விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் நேரில் இருந்து ஆஜராக ராகுலுக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நான் குற்றம் செய்யவில்லை எனக்கூறி, வழக்கறிஞர் மூலம் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

