சாலை விபத்தில் மூவர் பலி
பல்லாரியின் ஹொச தரோஜி அருகில், நேற்றிரவு வேகமாக சென்ற பைக், சாலை ஓரம் நின்றிருந்த மாட்டு வண்டி மீது மோதியது. பைக்கில் இருந்த வெங்கடேஷ், 45, ஆஷா, 8, அகிலா, 6, ஆகியோர் உயிரிழந்தனர். மாட்டு வண்டியில் இருந்த இருவர் காயமடைந்து, சிகிச்சை பெறுகின்றனர்.
துணிக்கடையில் தீ
பெங்களூரு, கெங்கேரியின், ஹொய்சாளா சதுக்கத்தில் துணிக்கடை உள்ளது. நேற்று காலை இந்த கடையில் தீப்பிடித்ததில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைகள் தீக்கிரையாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
நீரில் மூழ்கி இருவர் பலி
உடுப்பி, ஹெப்ரியின், நெல்லிகட்டி கிராஸ் அருகில் உள்ள, சீதா ஆற்றுக்கு நண்பர்கள் சிலர், நேற்று முன் தினம் மாலை சுற்றுலா வந்திருந்தனர். அப்போது தீபக், 34, சீனு டேனியல், 40, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர். நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவில் உண்டியல் கொள்ளை
ராம்நகர் நகரின் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பஞ்சமுகி ஆஞ்சனேயர் சுவாமி கோவில் உள்ளது. நேற்று அதிகாலை பூட்டை உடைத்து, கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள், உண்டியலை உடைத்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடிச் சென்றனர்.
சட்டவிரோத கல்குவாரி
பீதர், ஜனவாடாவின், காடவாதா கிராமத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதையறிந்த சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள், நேற்று அங்கு சென்று சோதனை நடத்தி, மூன்று டிராக்டர்கள், டிரில்லர்களை பறிமுதல் செய்தனர்.

