'பந்தா' பூஜாவுக்கு கிடைச்சுது நிவாரணம்; ஆக.,21 வரை 'அரஸ்ட்' கூடாது என உத்தரவு
'பந்தா' பூஜாவுக்கு கிடைச்சுது நிவாரணம்; ஆக.,21 வரை 'அரஸ்ட்' கூடாது என உத்தரவு
ADDED : ஆக 12, 2024 02:09 PM

புதுடில்லி: ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் தொடர்ந்த வழக்கில், 'வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை அவரை கைது செய்ய வேண்டாம்' என டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற பெண், யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்தார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பயங்கர உதார் வேலைகளை காட்டிய பூஜா, வேறு ஒரு அதிகாரியின் அறையை ஆக்கிரமித்தார்.
குற்றச்சாட்டு
தன் ஆடி காரில், சுழலும் சிகப்பு விளக்கு பொருத்திக் கொண்டார். தனி உதவியாளர் வேண்டும் என்றும் தகராறு செய்தார். இப்படி அரசால் வழங்கப்படாத வசதிகளை இவர், சக அதிகாரிகளை அச்சுறுத்தி அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மோசடி
விசாரித்த தேர்வாணையம், அவரது பணி நியமனத்தை ரத்து செய்தது. அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவாகியுள்ளது. அவர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு
இந்நிலையில், பூஜா கேத்கர், முன் ஜாமின் கோரி, டில்லி ஐகோர்ட்டை நாடினார். மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், '' அடுத்த விசாரணை ஆகஸ்ட் 21ம் தேதி வரும். அதுவரை பூஜா கேத்கரை கைது செய்ய வேண்டாம். டில்லி போலீசார், யு.பி.எஸ்.சி, பதில் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

