காங்., சதீஷ் சைல் தண்டனை தொடர்பான தீர்ப்பு; பிரதிக்காக காத்திருக்கும் சபாநாயகர்
காங்., சதீஷ் சைல் தண்டனை தொடர்பான தீர்ப்பு; பிரதிக்காக காத்திருக்கும் சபாநாயகர்
ADDED : அக் 31, 2024 07:39 AM

பெங்களூரு; பெலகேரி இரும்புத்தாது வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு தண்டனை விதித்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் பிரதி, இன்னும் சபாநாயகர் அலுவலகத்துக்கு வரவில்லை. தீர்ப்பு பிரதி கிடைத்தவுடன், அவர் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
விரிவு அறிக்கை
பல்லாரி, சண்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடந்த இடங்களில், 2010ல் எட்டு லட்சம் டன்னுக்கும் அதிகமான இரும்புத்தாதுவை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதை உத்தரகன்னடா, அங்கோலாவின், பெலகேரி துறைமுகத்தில் வைத்திருந்தனர்.
சில மாதங்களுக்கு பின், அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, வெறும் 2 லட்சம் டன் இரும்புத்தாது மட்டுமே இருந்தது. இதுதொடர்பாக, அன்றைய பா.ஜ., அரசுக்கு, லோக் ஆயுக்தா விரிவான அறிக்கை அளித்திருந்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல், தன் நிறுவனம் மூலமாக இரும்புத்தாதுவை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததை விவரிக்கப்பட்டிருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பரிந்துரை செய்திருந்தனர்.
இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய அதிகாரிகள், சதீஷ் சைல் உட்பட, பலரை கைது செய்தனர். இவர்கள் ஜாமின் பெற்றிருந்தனர். விசாரணையை முடித்த சி.பி.ஐ., மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
சதீஷ் சைல் உட்பட, ஏழு பேரின் குற்றம் உறுதியானது. தீர்ப்பு வெளியாகும் முன்பு, அவர் தனக்கு குறைவான தண்டனை வழங்கும்படி, நீதிபதியிடம் கண்ணீர் விட்டு மன்றாடினார். இதை ஏற்காத நீதிமன்றம், ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 44 கோடி ரூபாய் அபராதம் விதித்து, இம்மாதம் 26ம் தேதி தீர்ப்பளித்தது.
சபாநாயகர்
தீர்ப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள், சபாநாயகர் காதரிடம் தகவல் கூறியுள்ளனர். ஆனால் வெளியாகி நான்கு நாட்களாகியும், தீர்ப்பு பிரதி சபாநாயகர் அலுவலகத்துக்கு அதிகாரப்பூர்வமாக வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிறை தண்டனைக்கு ஆளான, சதீஷ் சைல் மீது மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தீர்ப்பு பிரதிக்காக அவர் காத்திருக்கிறார். பிரதி கைக்கு வந்ததும், சதீஷ் சைல் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. அதன்பின் அவர் சார்ந்த கார்வார் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்.

