ADDED : மார் 14, 2024 04:23 AM
கோலார், : லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.,வுக்குள் கோஷ்டி மோதல் தலைதுாக்கி உள்ளது. சிக்கபல்லாப்பூர் அல்லது கோலாரில் வரும் 15ல் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோலாரில் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மாவட்ட பா.ஜ., தலைவர் டாக்டர் வேணுகோபால் தலைமை வகித்தார். கூட்டத்தில் தங்கவயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஒய்.சம்பங்கி பிரச்னையை எழுப்பினார்.
அவர் பேசுகையில், “சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு துரோகம் செய்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தில் எப்படி பதவி தரலாம்? தங்கவயல் கிராம மற்றும் நகர பகுதிகளில் தலைவராக இருந்தவர்கள் பா.ஜ.,வுக்கு விசுவாசம் காட்டாமல் காங்கிரசுக்கு ஆதரவாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் பதவி எப்படி தரலாம்?” என, தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.
இதற்கு தங்கவயல் கிராம பகுதி தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் நாயுடு, நகர பகுதித் தலைவராக இருந்த கமல்நாதன் ஆகியோரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட தலைவர் டாக்டர் வேணுகோபால், குறுக்கிட்டு சமாதானப்படுத்த முயற்சித்தார்.
சம்பங்கியை தொடர்ந்து, மாலூரில் பா.ஜ., வேட்பாளராக களமிறங்கி தோல்வி அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் கவுடாவும் சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.
“மாலூர் சட்டசபைத் தொகுதியில், 30, 40 ஆண்டுகளாக கட்சியில் சீனியராக இருப்பவர்கள், கட்சிக்கு துரோகம் செய்ததால் தான் மாலூரிலும் பா.ஜ., தோற்றது. இவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்தது யார் யார் என்ற பட்டியலை கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர்களுக்கு பதவிகள் தரலாமா?” என, குமுறலை கொட்டினார், மஞ்சுநாத் கவுடா.
அனைவரும் புகார் பட்டியல் வாசிக்க ஆரம்பித்தால், நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை உணர்ந்த கோலார் பா.ஜ., - எம்.பி., எஸ்.முனிசாமி இருதரப்பினரையும் சமாதானம் செய்தார்.
இரு சட்டசபைத் தொகுதிகளிலிலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டது, தன் ஆதரவாளர்கள் என்பதால் எம்.பி., முனிசாமி களமிறங்கியதாக கட்சியினர் வருத்தமடைந்தனர்.
உட்கட்சி பூசல் தொடர்ந்ததால், ஆலோசனைக் கூட்டமே நடைபெறாமல் போனது. இதற்கிடையில் சிக்கபல்லாப்பூர் அல்லது கோலாருக்கு பிரதமர் வரும் நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

