ADDED : டிச 25, 2024 08:30 AM

கலபுரகி : அம்பேத்கரை அவமதித்து பேசியதாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, கலபுரகியில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பற்றி சமீபத்தில் லோக்சபாவில் பேசி இருந்தார். அம்பேத்கரை அவமதித்து பேசியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. தன் பேச்சை திரித்து உள்ளதாக அமித் ஷா விளக்கம் அளித்தார்.
எனினும் அமித் ஷாவை கண்டித்து கலபுரகியில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நேற்று காலையில் போராட்டம் துவங்கியது.
போராட்டக்காரர்கள் கலபுரகி டவுன் காந்தி சவுக் பகுதியில் கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நகரின் முக்கிய வழியாக ஊர்வலமாக சென்றனர்.
முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, கடைக்காரர்கள் தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்தனர். தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறைந்த அளவில் அரசு பஸ்கள் மட்டும் இயங்கின. மாலையில், நகரின் முக்கிய பகுதியில் டயர்களை சாலையில் போட்டு, போராட்டக்காரர்கள் எரித்தனர்.
அப்போது சாலைகளில் வந்த லாரிகளின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. இதுபோல பீதரின் பசவகல்யாணிலும் நேற்று முழு அடைப்பு நடந்தது.

