திரிணமுல் எம்பி மஹ்வா மொய்த்ராவுடன் மோதல்; பதவியை ராஜினாமா செய்தார் லோக்சபா கொறடா!
திரிணமுல் எம்பி மஹ்வா மொய்த்ராவுடன் மோதல்; பதவியை ராஜினாமா செய்தார் லோக்சபா கொறடா!
UPDATED : ஆக 04, 2025 08:21 PM
ADDED : ஆக 04, 2025 08:07 PM

புதுடில்லி: சக எம்பியான மஹூவா மெய்த்ராவுடன் மோதல் காரணமாக,திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, கட்சியின் கொறடா பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கல்யாண் பானர்ஜி, இவர் 4 முறை ஸ்ரீராம்பூரிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்நிலையில், சக எம்பியான மஹூவா மொய்த்ராவுடன் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், சக எம்பிக்களுடன் சரியான ஒத்துழைப்பு இல்லை என்று என் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில்,
இன்று கட்சியின் கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து கல்யாண் பானர்ஜி பதிவிட்டுள்ளதாவது:
சக எம்பியான மஹூவா மொய்த்ரா சமீபத்தில் கூறிய தனிப்பட்ட கருத்துக்கள், நாகரீகமற்ற மொழியை பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது.
தனிப்பட்ட நடத்தை பற்றிய கேள்விகளை ஒவ்வொரு பொது நபரும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். என்னைப்பார்த்து பாலியல் ரீதியாக விரக்தியடைந்தவர்' என்று முத்திரை குத்துவது துணிச்சல் அல்ல, அது வெளிப்படையான அத்துமீறல்.
ஒரு பெண்ணை நோக்கி இதுபோன்ற வார்த்தைகள் பேசப்பட்டால், நாடு தழுவிய அளவில் சீற்றம் ஏற்படும். அது சரியானதுதான். ஆனால் அத்தகைய வார்த்தைகளுக்கு ஒரு ஆண் இலக்காக இருக்கும்போது, அது நிராகரிக்கப்படுகிறது.
இதன் மூலம் தனது சொந்த தோல்விகளை மறைத்துக்கொள்ளலாம் மஹ்வா மொய்த்ரா நினைத்தால், அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்.
இவ்வாறு கல்யாண் பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
மஹ்வா மொய்த்ரா, கல்யாண் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. பல முறை இருவரும் நேருக்கு நேர் பார்லி வளாகத்தில் மோதிக் கொண்டுள்ளனர். மம்தா பஞ்சாயத்து பேசியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. இன்று இது குறித்து மம்தா விசாரணை நடத்திய நிலையில் கல்யாண் பானர்ஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முதல்வர் மம்தா பதிவு:
லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளின்
எம்.பி.க்களுடன் இன்று ஒரு மெய்நிகர் சந்திப்பை நான் கூட்டினேன். திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் ஸ்ரீ சுதிப் பந்தோபாத்யாய் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், சுதிப் தா நல்ல உடல்நலம் பெறும் வரை லோக்சபாவில் கட்சியைத் தலைமை தாங்கும் பொறுப்பை ஸ்ரீ அபிஷேக் பானர்ஜியிடம் ஒப்படைக்க எம்.பி.க்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு முதல்வர் மம்தா பதிவிட்டுள்ளார்.