ADDED : செப் 09, 2025 11:01 PM

புதுடில்லி:“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீடு வழங்கப்படும்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
யமுனை நதியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், கரையோரத்தில் இருந்த வீடுகள் மற்றும் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளம் வடிந்த நிலையில், யமுனை கரையோரவாசிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ரேகா குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
டில்லியின் 11 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, வெள்ளப் பாதிப்பு குறித்து கேட்டறிந்தேன். அதிகாரிகள் இன்னும் 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்றி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் அரசு இழப்பீடு வழங்கும். நிவாரணம் வழங்குவதற்கான பணிகளை முதல்வர் அலுவலக அதிகாரிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
வடக்கு, மத்திய, கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் ஷாஹ்தாரா ஆகிய ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களிலும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்க வாய்ப்புள்ளது.
எனவே, 11 மாவட்ட கலெக்டர்களிடமும் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். அதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
ஷாலிமார் பாக் ஆயுர்வேத மருத்துவமனை அருகே குடிசைப் பகுதியில் வசித்த அனிகேத்,9, கிருஷ்ண குமார்,13, ஆகிய இருவரும், 7ம் தேதி மதிய முனாக் கால்வாயில் குளித்தனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். கால்வாயில் பலியான இரு சிறுவர்களின் குடும்பத்தினரை, முதல்வர் ரேகா குப்தா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, இரு குடும்பத்துக்கும் தலா, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க கால்வாய்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.