பொங்கல் நாளில் நடக்க இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு மாற்றம்!
பொங்கல் நாளில் நடக்க இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு மாற்றம்!
ADDED : டிச 28, 2025 04:13 PM

புதுடில்லி: பொங்கல் நாளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு மாற்றப்பட்டு உள்ளது. ஜன.19ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்டயக் கணக்காளர்கள் இடைநிலைத் தேர்வு குரூப் 2 தேர்வின் ஐந்தாம் தாள், பொங்கல் நாளில் (ஜன.15) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பண்டிகை நாளில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புக்குரல் எழுந்தது. தேர்வை வேறு ஒரு நாளில் மாற்றி நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன.
இந் நிலையில், ஜன.15ம் தேதி நடப்பதாக இருந்த தேர்வு மாற்றப்பட்டு உள்ளதாக பட்டயக் கணக்காளர்கள் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுபற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் படி, ஜன,15க்கு பதில் ஜன.19ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்றைய தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தேதி மாற்றப்பட்டாலும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் செல்லுபடியாகும். மஹாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தமது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பட்டயக் கணக்காளர்கள் கழகம் குறிப்பிட்டு உள்ளது.

