‛'சக்தி' திட்டத்துக்கு சவால் '‛டிரிப்' எண்ணிக்கை அதிகரிக்க முடிவு கோடை விடுமுறை
‛'சக்தி' திட்டத்துக்கு சவால் '‛டிரிப்' எண்ணிக்கை அதிகரிக்க முடிவு கோடை விடுமுறை
ADDED : பிப் 07, 2024 10:57 PM

பெங்களூரு: காங்கிரஸ் அரசுக்கு பலம் சேர்க்கும், 'சக்தி' திட்டத்துக்கு கோடை விடுமுறை காலங்கள், கடும் சவாலாக இருக்கும். இதை எதிர்கொள்ள போக்குவரத்துத் துறை தயாராக உள்ளது.
கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு 'சக்தி' திட்டத்தை செயல்படுத்தி, பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளித்த பின், கே.எஸ்.ஆர்.டி.சி., உட்பட, அரசு பஸ்களில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. கூடுதல் பஸ்களை இயக்கியும் போதவில்லை.
பெண் பயணியர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திணறுகின்றனர். பல இடங்களில் பெண் பயணியருக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்த சம்பவங்களும் நடந்தன.
பொதுவாக ஏப்ரல் முதல், மே மாதம் வரை பள்ளிக்கு கோடை விடுமுறை இருக்கும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன், சுற்றுலா செல்வது வழக்கம். தீர்த்த யாத்திரை செல்வர். எனவே அரசு பஸ்களில், பயணியர் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
இதனால், இந்த இரண்டு மாதங்களும் சக்தி திட்டத்தை செயல்படுத்துவது, பெரும் சவாலாக இருக்கும். இதை உணர்ந்துள்ள போக்குவரத்து துறை, சவாலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இது தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:
முந்தைய ஆண்டுகள் அனுபவத்தின் அடிப்படையில், டிரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
எந்த சுற்றுலா தலங்கள், புண்ணிய தலங்களுக்கு, பயணியர் எண்ணிக்கை அதிகம் உள்ளது, எங்கெங்கு டிரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என, அறிக்கை தயாரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக 5,000 பஸ்கள் வாங்கப்படும். ஏப்ரல், மே மாதம் 3,000 பஸ்கள் கிடைக்கும். இந்த பஸ்கள் பயணியர் எண்ணிக்கை அதிகம் இருக்குமோ, அங்கு இயக்கப்படும். டிரிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உதவியாக இருக்கும்.
கூடுதல் மின்சார பஸ்கள் வந்திருக்க வேண்டும். டெண்டரில் அதிக தொகை குறிப்பிடப்பட்டதால், புதிய பஸ்களை வாங்க முடியவில்லை. பஸ்கள் வந்தால் பற்றாக்குறை பிரச்னை சரியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

