நீதிபதி ஓய்வு வயது நீட்டிப்பு மத்திய அரசு ஏற்க மறுப்பு
நீதிபதி ஓய்வு வயது நீட்டிப்பு மத்திய அரசு ஏற்க மறுப்பு
ADDED : பிப் 07, 2024 10:49 PM

புதுடில்லி :உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, திறன் அடிப்படையில் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் பார்லிமென்ட் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
பார்லிமென்டின் சட்டம் மற்றும் பணியாளர் அமைச்சகங்களுக்கான நிலைக்குழு, கடந்தாண்டு ஆகஸ்டில் நீதித் துறை நடைமுறை மற்றும் சீர்திருத்தம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது.
இதில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, அவர்களுடைய உடல் திறன், பணித் திறன், அளித்துள்ள தீர்ப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டது.
தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது, 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு, 62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைக்கு மத்திய சட்ட அமைச்சகம் பதில் அனுப்பியுள்ளது. அதில், இந்த பரிந்துரை, பார்லிமென்டுக்கான அதிகாரத்தை குறைப்பதாக உள்ளது. மேலும், கொலீஜியத்துக்கு அதிக அதிகாரம் அளிப்பதாகவும் உள்ளது. தனிநபர் சலுகைகள் காட்டியதாக தேவையில்லாத புகார் எழும் வாய்ப்பும் உள்ளது. மொத்தத்தில் இது நடைமுறை சாத்தியமில்லாதது என, பதிலில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தன் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, நிலைக்குழு பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசின் எதிர்ப்பு மற்றும் விளக்கத்தை ஏற்று, தன் பரிந்துரையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

