'ஆன்லைன் டெலிவரி' ஊழியர்களுக்கு புதிய விதிகளை வகுத்தது மத்திய அரசு
'ஆன்லைன் டெலிவரி' ஊழியர்களுக்கு புதிய விதிகளை வகுத்தது மத்திய அரசு
ADDED : ஜன 03, 2026 12:47 AM

புதுடில்லி: 'ஆன்லைன்' செயலி நிறுவனங்களின் உணவு, மளிகை மற்றும் பல்வேறு பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நலன் கருதி, சமூக பாதுகாப்பு சட்டத்தில் புதிய விதிகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
'அமேசான், பிளிப்கார்ட், ஸ்விகி, சொமாட்டோ, செப்டோ' போன்ற 'ஆன்லைன்' தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களில் இருந்து உணவு, மளிகை பொருட்கள் வரை வீட்டுக்கு டெலிவரி செய்கின்றன.
போராட்டம்
இந்த பணிக்காக தற்காலிக டெலிவரி ஊழியர்களை பயன் படுத்துகின்றன. இதுபோன்ற டெலிவரி ஊழியர்கள், நாடு முழுதும் 1.27 கோடி பேர் பணியில் உள்ளனர். 2029 - -30ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும் என நிடி ஆயோக் மதிப்பிட்டுள்ளது.
இவர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு பலன்கள் இல்லை. சமீபத்தில், 22 நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டெலிவரி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெலிவரி பணியாளர்கள் பல்வேறு பலன்களை பெறும் வகையில் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுஉள்ளது. அதன்படி, ஆன்லைன் நிறுவனத்தில் ஒரு பணியாளர் குறைந்தது 90 நாட்கள் வேலை செய்திருந்தால் அவருக்கு மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய பலன், பெண்கள் என்றால் மகப்பேறு விடுப்பு போன்ற சமூக பாதுகாப்பு பலன்கள் விரிவாக்கம் செய்யப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்காக பணியாற்றுவோர், ஆண்டுக்கு 120 நாட்கள் வேலை செய்திருந்தால் இந்த பலன்கள் கிடைக்கும்.
எதிர்பார்ப்பு
ஒரு நாளில் மூன்று நிறுவனங்களுக்கு பணியாற்றினால், அது மூன்று நாட்களாக கருதப்படும் என்பது போன்ற விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த பலன்களை பெற, மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான, 'இ -- ஷ்ராம்' இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இது தொடர்பாக பணியாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, ஏப்ரலில் இந்த விதிகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

